Monday, September 5, 2011

இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’


இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’



கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி, இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகால் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.
2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டவை ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ‘கசாப்’ என்கிற 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை ஏன் வழங்க வேண்டும், மரணம் எந்த வகையில் அவனுக்கு அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தண்டனை முறைகளை ஆங்கில ஊடகங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கின. சிறுமி முதல் பெரியவர் வரை ‘கசாப்’ மரண தண்டனை குறித்து கருத்து கேட்டு, இந்தியா முழுவதும் ‘கசாப்’ சாக வேண்டியவன் என்கிற பிரச்சாரத்தை செய்தன. மும்பை தொடர்வண்டி நிலையத்தில் இறந்து போன அப்பாவி மக்கள் மீது தாங்கள் காட்டும் கருணையாக, கசாப் சாகவேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்றுள்ள இந்தியனின் கடமை என்பது போலவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்து தீவிரவாதி ‘சாத்வி பிரக்யாவால்’ சுட்டு கொல்லப்பட்ட 68 பேரும், இந்தியர்கள்தான். இந்த 68 பேர் இறந்துபோன செய்தியையும், இதற்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைப் பற்றியும், இப்பாதகச் செயலை செய்த சாத்வி பிரக்யாவை தூக்கில் போட வேண்டும் என்றும், எந்த ஊடகமும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக சொல்லி கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் உண்மை முகம் இதுதான்.
ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, 'தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் இங்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.
மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் தொடங்கிய பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தேசிய இன விடுதலை அமைப்புகள் மற்றும் இசுலாமிய மத அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் முகாமையான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.
1995க்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகளில் சில தலைவர்கள் தங்களது மத இறுக்கத்தை விடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பார்ப்பனியத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் பழனிபாபா. அமெரிக்காவில் உள்ள பிடாலபியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து பேசிய ஆற்றல்மிகு பேச்சாளர் பழனிபாபா. 1997ல் இந்து தீவிரவாதி ஒருவனால் வெட்டிக்கொல்லப்பட்டார் பழனிபாபா. இந்துத்துவத்திற்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத சக்தியாக இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உதவியுடன் சமூக நீதிக்காக களம் கண்டவர் பழனிபாபா. அதன் காரணமாகவே பார்ப்பனியத்திற்கு பலியானார்.
‘சாத்வி பிரக்யா’ என்கிற இந்து தீவிரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இந்திய தேசியகட்டமைப்பு எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதேபோல் பழனிபாபா போன்ற இந்துவத்திற்கு எதிரான ஆளுமைகளையும் மறைத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒளிபரப்பின. ஆண்டாண்டு காலமாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் தலித் கையில் ஆயுதமேந்தியவுடன் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஈழவிடுதலைக்காக உயிர் துறந்த முத்துக்குமரன் முதல் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் வரை தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களையும், அர்ப்பணிப்பு வாழ்வையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்கும் இந்த ஊடகங்கள். ராகுல்காந்தி போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதி தலித்கள் வீட்டில் தங்கினாரென்றும், அவர்களை தொட்டுப் பேசினார் என்றும் கற்பனைவாத சோசலிச கருத்துக்களைப் பரப்பும் இந்த ஊடகங்கள் ஈழத்திற்குச் சென்று சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட தோழர் அங்கையர்கண்ணியைப் பற்றியும், சிங்களக் காடையர்களால் வன்தீண்டலுக்கு ஆளான தோழர் திருமலையைப் பற்றியும் இன்று வரை ஏன் பேசவில்லை?
பாலியில் வன்முறை, குழந்தைகளை கடத்தி கொலைச்செய்தல் போன்ற சம்பவங்களை மையமாக வைத்து ஊடகங்கள் தங்கள் கவலையை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றன. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை. இருப்பினும், கோவையில் மார்வாடிக் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு இறந்த பிறகே, இந்திய தேசிய கட்டமைப்பும் ஊடகங்களும் இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டன. சேரிக் குழந்தைகள் பலபேர் அரசு மருத்துவமனையில் கடத்தப்படுவதும், அக்குழந்தைகள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதும், சாதி இந்துக்களால் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவதும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சமூக அவலங்கள். அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் ஊடகங்களும், இந்திய அரசும் அப்பிரச்சனையில் அக்கறை கொள்கின்றன.
தமிழக அமைச்சர் ஒருவருக்கு டெல்லியில் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் அது கேலிச்சித்திரமாகிறது. ஆனால், வெளியுறவுதுறை அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐ.நா.பாதுகாப்பு அவை உரையின்போது, வேறு நாட்டு உரையை வாசித்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே வருகிறது. இதே தவறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மந்திரி செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா இந்த ஊடகங்கள்? மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை ஒடுக்குதல், தமிழ்தேசியப் போராட்டத்தை பகடி செய்தல், பழங்குடிகளின் வரலாற்றை மறைத்தல், சிறுபான்மை மக்களை அந்நியப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய வல்லாதிக்க கனவுகளை சராசரி குடிமகனின் பொதுப் புத்தியாக கொண்டு வருவதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘சாத்வி பிரக்யா’ போன்ற இந்து தீவிரவாதிகளை திட்டமிட்டே மறைத்து, பாதுகாத்து வருகிறது இந்திய தேசிய கட்டமைப்பு. இதன் இத்துத்துவ, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, தமிழ்தேசிய இன அடையாளத்தையும், தமிழ்தேசிய கட்டமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பணி நமக்கு இருக்கிறது.
- ஜீவசகாப்தன்

Thursday, August 18, 2011

Reporter OMAR: இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்ல...

Reporter OMAR: இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்ல...: இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ? 1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம் 2. அங்கே தேர் திருவிழா : இங்கே ச...

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு

3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்


4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்

7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு

8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள்,ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா,கத்தம்.

29. அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.

31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது,யானை ஊர்வலம்.

33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !

இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் 



போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய 


மக்களைக் காப்பானாக!

இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் 



இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? 


போலிகளாக வாழ்கிறோமா?

Tuesday, July 26, 2011

விஜயகாந்த் என்றொரு.....?




விஜயகாந்த் என்றொரு.....?


"இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது'' என்கிற இச்சொற்றோடர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பழைய திரைப்பட வசனம் ஆகும். ஆனால், இப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வசனம் எழுத வேண்டுமானால் பின்வருமாறுதான் எழுதவேண்டும். “தமிழ்நாடு எத்தனையோ விசித்திரமான அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை''. இதுவரை நம் நாட்டில் மற்ற அரசியல்வாதிகள் செய்யாத எந்தத் தவறை அவர் புதிதாகச் செய்துவிட்டார்? அவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று நமது தமிழக வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். பகுத்தறிந்து கேட்க வேண்டி எத்தனையோ கேள்விகளைக் கேட்கவேண்டிய தருணங்களில் நமது மக்கள் கேட்டிருந்தால் நமக்கு விஜயகாந்தைப் பற்றியெல்லாம் எழுதுகின்ற அவலநிலை வந்திருக்காது.
சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசியம், பெண்ணியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் எனப் பரந்துபட்டு விவாதித்து வந்த நாம் விஜயகாந்த்துக்காக இருபக்கங்களை ஒதுக்கும் கேடான அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்களில் எதிர்மறையாக விமர்சிக்கக்கூட தகுதியில்லாத நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் விஜயகாந்த். அந்த திரைப்படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த விளம்பரத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியலாக்க முயற்சிக்கிறார் இந்தப் புரட்சிக் கலைஞர்(!)
யார் இந்த விஜயகாந்த்? முப்பது வருடங்களுக்கு முன் மதுரை வீதிகளில் ரஜினிகாந்தைப் போல் தானும் ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்று இலட்சிய வெறியோடு கனவு கண்டவர்தான் விஜயராஜுலு என்று அழைக்கப்பட்ட இந்த விஜயகாந்த், எப்பேர்ப்பட்ட உயர்ந்த லட்சியம்(!) பார்த்தீர்களா தோழர்களே. (ரஜினிகாந்த் எப்பேர்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்(?) என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்). ரஜினிகாந்த் மீது தான் கொண்ட மோகத்தின் காரணமாகத்தான் விஜயராஜுலு என்கிற தன்னுடைய பெயரை விஜயகாந்த் என்று மாற்றி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரைப் போல் பெயர் மாற வேண்டும் என்பதற்காக “புரட்சித் தலைவர்'' பட்டத்திலிருந்து புரட்சியையும், கலைஞர் என்ற பட்டத்தையும் சேர்த்து “புரட்சிக் கலைஞர்'' என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரிலிருந்து, அடைமொழி வரை சுயமாகச் சிந்திக்க எதுவும் இல்லாத ஒரு தனித்தன்மை மிக்க நபர்தான் விஜயகாந்த்.
மதுரையில் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்த லியாகத் அலிகான், இப்ராகிம் ராவுத்தர் ஆகிய இருவரும் இவரது சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். லியாகத் அலிகானுடைய அரசியல் அனல் பறக்கும் வசனங்களைப் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கினார். பின்னர் அந்த இரு இசுலாமிய நண்பர்களுடன் மோதல் ஏற்பட்டு விஜயகாந்த் தனித்து விடப்பட்டார்.
அதற்குப் பிறகு அவர் நடித்த (வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன்) பல படங்களில் இசுலாமியர் எதிர்ப்பு அரசியலை முன் வைத்தார். இந்தியாவில் பல மசூதிகள் இருக்கு. ஆனால், பாகிஸ்தானில் ஒரு இந்துக் கோயில் இருக்காடா? என்று “நரசிம்மா'' படத்தில் வெளிப்படையாகவே “இந்துத்துவ'' ஆதரவு வசனங்களைப் பேசியிருப்பார். தொழுகை செய்யும் இசுலாமியர்களை வில்லன்களாக அறிமுகப்படுத்தும் அருவடைய பல படங்கள் “தேசப்பற்று'' மிக்க படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.
80களில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார் விஜயகாந்த், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக் காட்சிகளை அதிக நேரம் காண்பித்தவர்கள் என்கிற பட்டம் கொடுப்பதாக இருந்தால் விஜயகாந்த்க்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கண்டிப்பாக கொடுக்கலாம். சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல படங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கதாநாயகனின் தங்கை மற்றும் மனைவியைப் பாலியல் வன்புணர்ச்சி கொள்ளும் காட்சிகளின் மூலம் ஆண்களின் வக்கிர உணர்ச்சிகளைக் காசாக்கிப் பார்த்தார்கள் இருவரும். தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அடித்தட்டு மக்களின் நாயகனாக, வர்க்கப் போராளியாக இவர் அடையாளம் காட்டப்பட்டார்.
சிவப்புச் சிந்தனையாளராகவும், தி.மு.க. அனுதாபியாகவும், சில காலம் காலத்தை ஓட்டினார் விஜயகாந்த். ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்துகொண்ட பிறகு, அந்த இடத்தை நிரப்புவதற்கு, அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஊழல் கட்சிகள் என்று இவர் விமர்சித்த இருகட்சிகளில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பல பேர் இவர் கட்சியில் இணைந்தனர்.
இந்த லட்சியத் தொண்டர்களை வைத்துக்கொண்டும், தனது கறுப்புப் பணத்தை வைத்துக் கொண்டும் “ஊழலை ஒழிப்போம்" என்று நகைச்சுவையாகப் பேசிவருகிறார் விஜயகாந்த். திராவிட இயக்க அரசியல், தமிழ்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியல் என்று தனக்கென்று எந்தக் கருத்தியலும் இல்லாதவர், இன்னும் சொல்லப்போனால் இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாதர் படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த அறிமுகமே தனது அரசியல் வாழ்விற்கான மாபெரும் தகுதியாக நினைத்துக் கொள்பவர்,
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது பௌதீக விதி. விஜயகாந்திடம் வெற்றிடமாக இருக்கும் அரசியல் அறிவை “இந்துத்துவ சக்திகள்'' (சோ, சுப்பிரமணியசுவாமி, சங்கரமடம்) நிரப்பிக் கொள்ளும் கட்சி ஆரம்பிக்கும் போதே கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சங்கரமடாதிபதி வாழ்த்து தெரிவித்தார் என்றால் அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “தேசியம்'', "முற்போக்கு'', “திராவிடர்'', “கழகம்'' இந்த நான்கு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் சொல்லத் தெரியாத விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இந்துத்துவ அமைப்புகள், ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம் மற்றும் பிற்போக்கு அமைப்புகளையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் நமது தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்த அரசியல் காமெடியர் விஜயகாந்த்தையும் தாங்கி கொண்டிருக்கின்றனர்.
வடமாவட்டங்களில் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர்களும், “பறையர்'' என்று அடையாளப்படுத்துகின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் விஜயகாந்த்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் “அருந்ததியர்கள்'' என அழைக்கப்படுபவர்களும் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக உள்ளனர். சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு என்ற எந்தச் சமூகநீதி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இந்த அரைவேக்காட்டுத் தலைவன் பின்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் அணி வகுத்து நிற்பது முற்போக்குச் சிந்தனையாளர்களை வேதனையடையச் செய்கிறது. விஜயகாந்த் பொதுமேடையில் தனது வேட்பாளரை அடிப்பதைக் கூட, அக்கட்சி தொண்டர்கள் நியாயப்படுத்தவே செய்கின்றனர். ஏனெனில் ஒரு முதலாளிக்கு தனது தொழிலாளியை அடிக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலவுடைமைச் சமூக மனப்பான்மையே விஜயகாந்த் தொண்டர்களிடம் காணப்படுகிறது.
விஜயகாந்த்தின் வெற்றி என்பது நிலவுடைமைச் சமூக மனநிலைக்குக் கிடைக்கும் வெற்றியாகும். விஜயகாந்த்தின் அரசியல் இருத்தல் என்பது, சமூகம் வளர்ச்சி நிலையில் பின்னோக்கிப் பயணிக்கிறது என்பதைப் பட்டவர்த்தமாகக் காட்டுகிறது. பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், மற்றும் மார்க்சியம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், விஜயகாந்த் போன்ற கோமாளி ஆளுமையின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பது வருத்தப்பட வைக்கிறது. நம்முடைய அரசியல் எதிரி என்று அடையாளப்படுத்தும் அளவிற்குக் கூட தகுதியில்லாத விஜயகாந்த் பற்றி இக்கட்டுரைக்கு என்ன பெயர் சூட்டலாம்? என்பதில் எனக்கு குழப்பம் இருப்பதால், இக்கட்டுரைக்கு பெயர் வைக்கும் வேலையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
- ஜீவசகாப்தன்.




Monday, June 27, 2011

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


  • ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) என்றால் என்ன?
ஸ்பெக்ட்ரம் என்றால் வேவ்ஸ் என்று சொல்லப்படும் மின் காந்த அலைகள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திலிருக்கும் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேச உதவும் கம்பியில்லா அலைகள்.ரேடியோ, டிவி, செயற்கைக்கோள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஸ்பெக்ட்ரம் பிரீகுவென்சி ஒதுக்கப்படும்.

  • 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
ஜி என்பது ஜெனரேஷன் - தலைமுறை என்பதைக் குறிக்கும். 1 ஜி என்பது முதல் தலைமுறை. லேண்ட்லைன் டெலிபோன், வாக்கி டாக்கி உள்ளிட்டவை முதல் தலைமுறை ஸ்பெக்ட்ரத்தில் அடங்கும். இரண்டாம் தலைமுறையின் கீழ் செல்போன் வரும். 3 ஜி - மூன்றாம் தலைமுறை செல்போனிலேயே முகம் பார்த்துப் பேசுவது.

  • யார் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்குவது?
இந்திய அரசாங்கம் ஸ்பெக்ட்ரத்தை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும். மத்திய தொலைத்தொடர்புத் துறை மூலமும், ட்ராய் என்றழைக்கப்படும் டெலிகாம் ரெகுலாரிட்டி ஆத்தாரிட்டி ஆப் இந்தியா (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) மோளம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்.
  • ஊழல் எவ்வாறு நடந்தது?
'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை ட்ராய் வகுத்தது. அதன் அர்த்தம் எந்த நிறுவனம் முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கு விண்ணப்பம் செய்கிறதோ அதிலிருந்தே கணக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அனால் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான ராசாவோ தனக்கு வேண்டப்பட்ட, கொல்லைப்புறமாக பணம் கொடுத்த நிறுவனங்களுக்கு முன்பே ரகசியமாக தெரிவித்துவிட்டு, வேண்டப்படாத நிறுவனங்களுக்கு சொல்லாமல் திடீரென்று ஒரு தேதியை குறிப்பிட்டு, அத்தேதியில் குறிப்பிட்ட 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான பணத்தை வங்கிகளிலிருந்து டிடியாக எடுத்து வரவேண்டுமென்றும் உத்தரவிட்டார். முன்பே சொல்லாமலிருந்தால் எவ்வாறு 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான ரூபாயை வங்கியிலிருந்து எடுக்கமுடியும்? அவ்வாறு பணம் கட்டிய ஸ்வான் டெலிகாம், யூனிடெக் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டன. இதில் ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரத்தைப் பெற்று அதை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு விற்றது. அந்த ஸ்வான் நிறுவனம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ள நிறுவனமென்றும், அதன் இயக்குனர் ஷாஹித் பால்வா, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது. யூனிடெக் என்பது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் (தினத்தந்தி நாழிதளில் அடிக்கடி முதல் பக்கத்தில் விளம்பரம் வரும்). யூனிடெக் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி, பலமடங்கு லாபாம் பார்த்து நார்வேயைச்சேர்ந்த டெலினார் என்ற நிறுவனத்திற்கு விற்றது. (யூனிடெக் மற்றும் டெலினார் இரண்டு பெயரையும் சேர்த்து யூனினார் என்று நிறுவனத்தை துவக்கினார்கள்). மேலும் டாடா நிறுவனமும் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி ஜப்பான் நாட்டு நிறுவனமான டொகோமொவிடம் பன்மடங்கு லாபம் வைத்து விற்றுவிட்டது.
மேலும் முக்கியமானது விலை. 2001ல் சர்க்கரை விலை 12 ரூபாயாக இருந்திருக்கும். அதே 2008ல் 16 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆண்டிலும் விற்றால் 4 ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதே கடஹிதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடந்தது. 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆடும் ஸ்பெக்ட்ரத்தை ராசா விற்றார். இதனால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதென்று இந்திய கணக்குத தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் விற்றதால் கொடுப்பதற்கு ராசா கொல்லைப்புறமாக 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்று, அதை தன்னை வளர்த்த கட்சிக்கும், தனது தலைவருக்கும், நெருங்கியவர்களுக்கும் (கனிமொழி) பங்கிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புள்ள எடிசலாட் நிறுவனத்திற்கும், சீனா ராணுவத்துடன் தொடர்புள்ள டெலினார் நிறுவனத்திற்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கக்கூடாது என நிதி அமைச்சகம் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது நிதி அமைச்சராகயிருந்த ப.சிதம்பரம் அவ்விதியைத் தளர்த்தி ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவங்கள் மூலம் ராசாவுடன் சேர்ந்துகொண்டு ஸ்பெக்ட்ரம் வழங்க உதவியதாகவும், ராசாவின் நடவடிக்கை அனைத்திற்கும் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பிருப்பதாகவும், அடுத்தடுத்த குட்ட்ரப்பதிரிகையில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
ராசாவுக்கு முன்பு அப்பதவியிலிருந்த தயாநிதி மாறனிடம் ஏர்செல் நிறுவனத்தைத் துவங்கிய சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம் வழங்க மறுத்த மாறன், மலேசியாவைச் சேர்ந்த  இலங்கைத் தமிழர் ஒருவருக்கு ஏர்செல் நிறுவனத்தை விர்கச்சொல்லி மிரட்டினார். மிரட்டல் தாங்க முடியாமல் சிவசங்கரனும் எர்செல்லை விற்றுவிட்டார். அடுத்த சில மாதங்களில் எர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இது ஏனெனில், எர்செல்லை வாங்கியவர் நடத்திவரும் மேக்சிஸ் நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரராகிய கலாநிதி மாறனுடைய  சன் டி.டி.ஹெச்.ல் முதலீடு செய்துள்ளது. அதன் காரணமாகவே தயாநிதி மாறன் அவ்வாறு செய்தார் என கூறப்படுகிறது.அதன் மூலம் தயாநிதி மாறன் 675 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சிவசங்கரன். ஜூன் 30 ஆம் தேதி தாக்கலாகவுள்ள 3 வது குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி மாறன் பெயர் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 

  • கனிமொழி சிக்கியது எப்படி?


தயாநிதி மாறனுடன் மோதல் ஏற்பட்டபோது, சன் டிவியிலிருந்து பங்குகளை திருபப்பெற்றுக்கொண்டு கலைஞர் டிவி துவக்கப்பட்டது. வெறும் 5 கோடி ரோபாய் அளவே முதலீடு கொண்ட கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடனாக டி.பி. ரியாலிட்டி நிறுவனம் கொடுத்துள்ளது. அத்தொகையையும் வட்டி 31 கோடி ரூபாயையும் சேர்த்து திரும்பக்கொடுத்து விட்டதாக கலைஞர் கூறுகிறார். கலைஞர் டிவி துவங்கி இரண்டு வருடமே ஆகிறது, பின் எவ்வாறு இவ்வளல்வு பெரிய தொகையை அவர்கள் திரும்பக்கொடுத்தார்கள்?

கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட பணமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதுபோல், ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனமான டி.பி. ரியாலிட்டிகுச்சென்று, அங்கிருந்து அதன் துணை நிறுவனமான குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ்  நிருவனத்திற்குச்சென்று , அங்கிருத்து அதன் துணை நிறுவனமான சினியுக் நிருவனத்திற்குச்சென்று, அங்கிருந்து கலைஞர் டிவிக்கு வந்துள்ளது. டி.பி. ரியாலிட்டி, குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ், சினியுக் என அட்ரஸ் இல்லாத நிறுவனங்களைச் சுற்றி வந்ததாலும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருப்பதாலும், 214 கோடி ரூபாய் ஊழல் பணமே என்று சி.பி.ஐ. கூறுகிறது. ஒழுங்கான பணமாக இருந்திருந்தால் நேரடியாக கொடுக்கப்பட்டிருக்கும், கருப்பனமாக இருப்பதாலேயே இவ்வளவு தூரம் சுற்றி வந்துள்ளது என்றும் சி.பி.ஐ. நினைக்கிறது. இதன் காரணமாகவே 20 சதவீத கலைஞர் டிவி பங்கு வைத்திருக்கும் கனிமொழியும், அதே 20 சதவீத பங்கு வைத்திருக்கும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர். வயதானவர் என்பதால் 60 சதவீதம் பங்கு வைத்திருக்கும் கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் பெயரைச் சேர்க்கவில்லை என சி.பி.ஐ. கூறியது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மூன்றும் கனிமொழி, சரத் குமாரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

  • இனி என்ன நடக்கும்?


கழகத்திற்காக உழைத்த தன்னைக் காட்டிக்கொடுத்ததால் ராசாவும், 214 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்தபோது பதவியில் இல்லாத சரத் குமாரும் அப்ப்ரூவர் ஆக வாய்ப்புள்ளது!. அதிகபட்சமாக 11 குற்றப்பத்திரிகை தாக்கலாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரையில் கனிமொழி, ராசா, சரத் குமார் ஆகியோர் ஜெயிலேயே இருக்க நேரிடும். தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகியோரையடுத்து மேலும் சில தி.மு.க., காங்கிரஸ் தலைகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
குற்றப்பத்திரிகை எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கலான பிறகு, வழக்கு விசாரணைக்கு வரும், அதன் பிறகே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். இவ்வழக்கு முழுமையாக முடிய எப்படியும் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேலாகலாம் எனவும் கூறப்படுகிறது!. வழக்கு முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 7 வருடம் சிறை தண்டனை கிடைக்கக்கூடும். ஆக வாழ்நாளின் பெரும்பகுதி ராசா, கனிமொழி, சரத் குமார், ஷாஹித் பால்வா உள்ளிட்டவர்கள் சிறையிலேயே கழிக்க நேரிடும்!.
ஊழல் செய்பவர்கள் இவ்வழக்கைக் கண்டாவது பயந்து படிப்பினைப் பெறவேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்!.

Saturday, May 21, 2011

   
                                
பாபா ராம்தேவின் நாடகம்!

 "என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு வன்முறையை நான் பார்த்ததேயில்லை" என ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். யோகா வகுப்பு நடத்தவும், மாலை 6 மணிக்குள்ளாக அனைவரும் கலைந்துச் சென்று விடுவோமென்றும் காவல் துறையிடம் அனுமதி வாங்கினார் பாபா. ஆனால், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என ஊடகங்களுக்குக் கூறினார். இதனால் அங்கு கூடி வந்த கூட்டத்தைப் பார்த்து தனது முடிவை மாற்றி களைந்து போக மருத்துவிட்டார் பாபா. 
 இதனால் வேறுவழி இல்லாமல் மத்திய அரசு காவல் துறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது. வெறும் 2000 பழங்குடியினரை கலைப்பதர்க்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொள்ளும் காவல் துறை ராம்லீலா மைதானத்தில் கையாண்டவிதம் மென்மையானதே. இதற்கே பாபா, 'இப்படியொரு வன்முறையைப் பார்த்ததில்லை' என கூறுகிறார் என்றால் அவர் (பாபா) இத்தனை நாள் மிகவும் பாதுகாப்பான, சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார் என்று பொருளாகிறது. 
   "ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும், இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது" என்று கூறியவரே இந்த ராம்தேவ்தான். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தால் உருவாகப்பட்டவராககூட பாபா ராம்தேவ் இருக்கலாம்!.
 கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதேவேளை அதற்காக பாபாவின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமா? அவர் கூறும் கோரிக்கைகள்தான் என்ன?
  •  ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென கோருகிறார். கொலை செய்த குற்றவாளிகளுக்கே மரண தண்டனை கொடுக்கக் கூடாதென பலர் கூறிவரும் வேளையில் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை என்பது இந்தியாவில் நடக்காத காரியம்!.
  • 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிவிட வேண்டுமெனவும் கூறுகிறார். இந்த நோட்டுகளை ஊழல் பெரிச்சாளிகள் மட்டுமா வைத்துள்ளார்கள்? சாதாரண உழைத்து உண்பவர்கள்கூடதான் வைத்துள்ளார்கள். எனவே இதுவும் வேலைக்கு ஆகாத கோரிக்கை!.
  • ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாக்கத்தின் அடயாளங்கள் அளிக்கப்பட வேண்டுமென்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டுமாம். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்சனை அல்ல, மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியைக் கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிவாசிகளுக்கு எதிரானது. எனவே இந்தக் கோரிக்கையும் செல்லுபடியாகாது!. 
  • அடுத்து மிகவும் முக்கிய கோரிக்கையை அவர் வைக்கிறார். அது இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியவை பாபாவுக்கு வேம்பாகக் கசக்கிறது போலும்! அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்கள் போன்றோரின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பாபா! ஆக இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப் படவேண்டியதுதான்!. 
   இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதிக்காமல், காவல் துரையின் அத்துமீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. இவருக்குப் பின்னால் உள்ள ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை அன்று தோன்றுகிறது. இதனைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!.
   மேலும், பாபா ராதேவ் உண்ணாவிரத நாடகத்தை 9 நாள் கழித்து இன்று முடிதுக்கொண்டிருக்கிறார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தேராடவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்து இருக்கின்றன.
   பாபா உண்ணாவிரதம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பி.ஜே.பி. ஆட்களுமே அதிகம் வந்து பாபாவுக்கு ஆதரவளித்தனர். ஆக பாபா ராம்தேவை பின்னாலிருந்து இயக்குவதே ஹிந்துத்துவா சக்திகள்தான் என்று ஒரு சந்தேக எண்ணம் தோன்றுகிறது.
   எது எப்படியோ, பாபாக்களும், ஹசாரேக்களும் ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டு, மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே நிஜம்!.
                                                                                                                              - உமர் முக்தார்,                         
                                                                                 செய்தியாளர், வின் தொலைகாட்சி

Genocide of Tamils in Sri Lanka on May 17

                                                   http://www.social-journalist.blogspot.com

இலங்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் நாளை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜ் அரங்கம் எதிரில் Bank Employees Federation of India (BEFI) அரங்கில், அக்கொடுன்ஜெயளுக்கு ஆதாரமான புகைப்படங்களைக்கொண்டு கண்காட்சியொன்றை நடத்துகிறோம், இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள்.